சென்னை Page 3

அரசு அருங்காட்சியகம்
'பாந்தியன் காம்ப்ளக்ஸ்' என்றதும் உங்களுக்குப் புரியாது. பல்பொருள் அங்காடி என்றும் நினைத்து விடாதீர்கள். இதுவொரு பழம்பொருள் காட்சியகம். அருங்காட்சியகம் கி.பி. 1789 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஆங்கில ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு எங்குமே பார்க்கக் கிடைக்காத கலைப்பொருட்களின் சங்கமம் இது. சமகாலப் பொருட்கள் முதல் வரலாற்றுக்கு முந்தைய கண்டு பிடிப்புகள் - கற்சிலைகள், வெண்கலச் சிலைகள், உயிரியில், இனவியல், புவியியல் சார்ந்த சான்றுகள் இங்கு இடம்பெற்றுள்ளன. ஆயிரம் நூல்களின் அறிவை இந்த அருங்காட்சியகம் ஒருமுறையில் உங்களுக்கு கற்றுத்தந்து விடும். உலகப் புகழ்ப்பெற்ற அமராவதி மென்கல் புடைப்புச் சிற்பங்கள் இங்குதான் உள்ளன. இந்தச் சிற்பத் தொகுப்பில் புத்த ஜாதகக் கதைகளின் முக்கியக் கட்டங்கள் சித்திரக் கதை பாணியில் செதுக்கப்பட்டுள்ளன. லண்டன் அருங்காட்சியகத்தில் இதன் மற்றொரு பகுதி உள்ளது.
அமைவிடம்:- 486, பாந்தியன் சாலை, சென்னை - 600 008. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. கட்டணம் வெளிநாட்டினர் - 5 டாலர் உள் நாட்டினர் - பெரியோர் ரூ.15, சிறுவர் ரூ.10. விடுமுறை வெள்ளிக்கிழமை தொலைபேசி - 28193238 - 28193778. தொலைநகல் - 28193035.
கோட்டை அருங்காட்சியகம்
புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் இருப்பது தெரியும். இங்குதான் அருங்காட்சியகமும் இருக்கிறது. வடக்குப் புறத்தில் அமையப்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதைபுதைந்திருக்கிறது. ஒரு காலத்தில் கோட்டையில் பணியாற்றும் அதிகாரிகளின் அலுவலகமாக இருந்தது. பிறகு அது ஒரு வங்கியாக மாறியது. இதுவே மெட்ராஸ் பேங்கின் முன்னோடி வங்கி. பின்னர் பம்பாய் மற்றும் பெங்கால் வங்கியுடன் இணைந்து இம்பீரியல் பேங்க் என்ற பெயர் சூடிக் கொண்டது. இப்போது அதன் பெயர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இதன் மாடியில் உள்ள நீண்ட அறை பொது மக்களுக்கான பட்டுவாடா அறையாக இருந்திருக்கிறது. பிறகு கி.பி. 1799 இல் மேற்கூரையில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இதுதான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கம். இவ்வாறான வளர்சிதை மாற்றங்களின் இறுதியாக, 1948 இல் அருங்காட்சியமாக அது தன்னை மாற்றிக் கொண்டது.
அப்படியென்ன அற்புதங்கள் இங்கு இருக்கின்றன? சென்னையை உருவாக்கிய மாபெரும் மனிதர்களின் அசல் கையெழுத்து ஆவணங்கள், பழங்கால நாணயங்கள், வெள்ளிச் சாமான்கள், சீருடைகள், மூலப்படிகள், செதுக்கு வேலைப்பாடுகள் மற்றும் ஆரம்பகாலச் சென்னையின் கச்சாத்துப் பொருட்கள் இப்படி இந்தக் காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் பொருட்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனைக்குப் பிறகும் இன்னும் புறப்படாமல் இருந்தால் எப்படி?
அமைவிடம்: புனித ஜார்ஜ் கோட்டை, காமராஜர் சாலை, சென்னை - 600 009. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை. வெள்ளிக்கிழமை விடுமுறை. கட்டணம் வெளிநாட்டினர் - 5 டாலர் உள்நாட்டினர் ரூ.5.
தேசிய கலைக் கூடம்
ஒரு குட்டி நாடாளுமன்றக் கட்டடம் போலத் தோன்றும் இது இந்தோ - இஸ்லாமிய கட்டடக் கலையின் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. இக்கட்டடம் முழுவதும் மணற்கல்லால் கட்டப்பட்டது. தங்கக் கலசத்தினுள்ளே வெள்ளிப் புதையல்களா? இக்கட்டடமே ஒரு கலைப் புதையல்தான். 16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுக் கால மொகலாய ஓவியங்கள், வெண்கலக் கலைப்பொருட்கள் மற்றும் 10 - 13 ஆம் நூற்றாண்டுகளின் கைவினைப் பொருட்களும் இங்குள்ளன. இக்கலைக் கூடத்தில் உள்ள பிரம்மா சிலை எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.
அமைவிடம்: 486, பாந்தியன் சாலை, சென்னை - 600 008. நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. கட்டணம் வெளிநாட்டினர் - 5 டாலர் உள்நாட்டினர் - பெரியோர் ரூ.15. சிறுவர் ரூ.10. கல்விச்சலுகை கட்டணம் ரூ.3 வெள்ளிக்கிழமை விடுமுறை. தொலைபேசி - 28193238 - 28193778. தொலைநகல் - 28193035.
அஷ்டலட்சுமி கோயில்
அஷ்டலட்சுமிகளையும் தரிசனம் செய்ய சிறு சிறு வளைவு நெளிவுகளில் நுழைந்து வருவதே தெய்வீக அனுபவம். இக்கோயிலில் லட்சுமிதேவி எட்டு முகங்களாலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வரும் நவராத்திரி 9 நாள் விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பானது. இந்தக் கோயிலுக்குத் எல்லாத் திசைகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
அமைவிடம்: எலியட்ஸ் கடற்கரை. சென்னை - 600 090. நேரம் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை. தொலைபேசி - 24911763.
ஐயப்பன் கோயில் (மகாலிங்கபுரம்)
ஐயப்பனை தரிசிக்க கேரளத்திற்குச் செல்லாமல் சென்னையிலும் தரிசித்துக் கொள்ளலாம். அதற்கொரு வாய்ப்பு இக்கோயில் சென்னையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஐயப்பன் கோயில்.
அமைவிடம்: 18, மாதவன் நாயர் தெரு, மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. நேரம்: காலை 4 மணி முதல் 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. தொலைபேசி - 28171197.
காளி - பாரிகோயில்
காளி வீடு இது. காளி பாரி என்ற வங்காளச் சொல்லின் பொருள் காளி வீடு என்பதுதான். கொல்கத்தாவில் உள்ள தக் ஷனேஸ்வரர் காளி கோயிலின் சாயலில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமைதியான தியான மண்டபம் உள்ளது. அவ்வப்போது பஜனைகளும் ஆன்மிக சொற்பொழிவுகளும் நிகழும். நவராத்திரி துர்க்கை பூசை மற்றும் காளி பூசை தினங்கள் வெகு சிறப்பானவை.
அமைவிடம்: 32, உமாபதி தெரு, சென்னை - 600 033. நேரம்: காலை 6-12 மணி மாலை 4-9 மணி வரை தொலைபேசி - 24837170.
ஐயப்பன் கோயில் (இராஜா அண்ணாமலைபுரம்)
இது இரண்டாவது ஐயப்பன் கோயில். சபரி மலையில் கோயில் கொண்ட கடவுள் இங்கும் எழுந்தருளியுள்ளார். மூலக் கோயில் போலவே இங்கும் 18 படிகள் உள்ளன. சிறப்புப் பூஜைகள் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும்.
அமைவிடம்: இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28. நேரம்: காலை 6-11 மணி வரை மாலை 5.30-9 மணி வரை. தொலைபேசி - 26490013.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்க மையம்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் உலகம் முழுதும் பலரை ஹரே ராமா சொல்ல வைத்திருக்கிறது. சுவாமி பக்தி வேதாந்த பிரபு பாதா என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம். இங்கு வழிபாடு முடிந்த கையோடு வயிற்றுக்கும் ஈயப்படும்.
அமைவிடம்: 32 பர்கிட் சாலை, தி.நகர், சென்னை - 600 017. நேரம்: காலை 4.30-1.00 மணி வரை மாலை 4-8 மணி வரை.
கபாலீஸ்வரர் கோயில்
அகண்ட திருக்குளம், எதிரே ஆதிசிவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில். நான்கு மாட வீதிகள். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருத்தலம். அன்னை பார்வதி மயில் உருவில் வந்து எம்பெருமானை வழிபட்டதால் இந்தப் புனிதத் தலம் திருமயிலை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பத்து நாட்கள் நடக்கும் திருவிழா. மிகவும் முக்கியமானது. பத்தாம் நாள் நடக்கும் அறுபத்து மூவர் திருவிழா இக்கோயிலின் தனிச் சிறப்பு.
அமைவிடம் - மயிலாப்பூர், சென்னை - 600 004. நேரம் காலை 6-1 மணி வரை மாலை 4-8 மணி வரை. தொலைபேசி - 24641670.
காளிகாம்பாள் கோயில்
வர்த்தக நெரிசல் மிகுந்த பாரிமுனையில் தெய்வீக வெளிச்சம் தரும் ஆலயம். இங்கு நிகழும் வழிபாடு புதுமையின் வடிவம் பக்தர்களை அமைதியாக அமரவைத்து அபிஷேகம் செய்து முடிந்ததும் தேங்காய் பழங்களை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இங்கு கோயில் கொண்டுள்ளாள் பராசக்தியின் மற்றொரு திருவுருவான உக்கிர சொரூப காளி. இன்னொரு சுவாரஸ்யமான செய்தி மராட்டிய வீரன் சத்ரபதி சிவாஜி 3.10.1677 அன்று இக்கோயிலில் வழிபட்டதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.
அமைவிடம்: 212, தம்பு செட்டி தெரு, சென்னை - 600 001. நேரம்: காலை 6.30-12 மணி வரை மாலை 5-9 மணி வரை. தொலைபேசி - 25229624.
பாம்பன் சுவாமிகள் கோயில்
சித்தர்களைத் தேடி மலைக்காடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. இங்கேயும் ஒரு சித்தர் முக்தியடைந்துள்ளார். இராமேஸ்வரம் அருகே பாம்பனில் 1850 ஆம் ஆண்டு அவதரித்த பாம்பன் சுவாமிகள் 1922இல் முக்தியடைந்தார். மயூரபுரத்தில் அவரது சமாதி மற்றும் கோயிலாக இது விளங்குகிறது.
அமைவிடம் - மயூரபுரம், திருவான்மியூர், சென்னை - 41. நேரம் காலை 6-1 மாலை 3-8 மணி வரை. தொலைபேசி - 24521866.
மத்திய கைலாஷ்
அடையாறில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் சாலை முகத்துவாரத்தில் அமைந்திருக்கிறது மத்திய கைலாஷ். வெண்பளிங்குக் கற்களில் உருவாக்கப்பட்ட அமைதி தவழும் ஆன்மிக அடையாளம் இது. வலப்புறத்தின் நடுவில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். தந்தை பரமேஸ்வரன், அம்மை உமையவள், ஆதித்யன் மற்றும் திருமால் ஆகியோர் எழுந்தருளியுள்ளார்கள். இங்கு அனுமனுக்கும் பைரவனுக்கும் சன்னதிகள் தனியே உள்ளன. மரங்களின் பசுமையில் பக்தி தழைக்கிறது.
அமைவிடம்: சர்தார் பட்டேல் சாலை, அடையாறு, சென்னை - 600 020. நேரம்: காலை 5.30-12 மாலை 4-8 மணி வரை. தொலைபேசி - 22350859.
மருந்தீஸ்வரர் திருக்கோயில்
மருந்தே சிவம்; சிவமே மருந்து. இத்திருத்தலத்தில் உள்ள முக்கண்ணனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இங்கு மூலிகைத் தோட்டம் ஒன்றும் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் நமது கலாச்சாரம் கட்டடக்கலை ஆகியவற்றின் சாட்சியாக நிற்கிறது. இத்திருத்தலத்திற்குக் இராம காவியம் படைத்த வால்மீகி வந்ததாக கர்ண பரம்பரை செய்தி உண்டு. அதன் காரணமாக இப்பகுதி திருவான்மியூர் என்றழைக்கப்படுகிறது.
அமைவிடம்: திருவான்மியூர், சென்னை - 600 041. நேரம்: காலை 6-1 மாலை 4-8.30 மணி வரை. தொலைபேசி 24410477.
பார்த்தசாரதி சுவாமி கோயில்
மெரினா கடற்கரைக்கு மிக அருகில் ஒரு வைணவ திருத்தலம். புராதனம் படிந்த கோயில் வளாகம். எழில் நிறைசிற்பங்களின் காட்சிக்கூடமாக அருள்தரும். உயர்ந்த கோபுரங்களும் பரந்து விரிந்த பிரகாரங்களும் பக்த மனங்களுக்கு ஆறுதல் தரும் அம்சங்கள். இக்கோயில் தென் த
Pages:-     1     2